உள்ளாட்சித் தேர்தல் & பூரண மதுவிலக்கை வலியுறுத்தி கிராம சபை தீர்மானம் – தங்கபாலு வலியுறுத்தல்

உள்ளாட்சித் தேர்தல் & பூரண மதுவிலக்கை வலியுறுத்தி கிராம சபை தீர்மானம் – தங்கபாலு வலியுறுத்தல்.

உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்தவும் பூரண மதுவிலக்கை வலியுறுத்தியும் கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுக முன்னாள் மத்திய அமைச்சர் கே.வீ. தங்கபாலு வலியுறுத்தல்

கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றார், மகாத்மா காந்தியடிகள். இதை கருத்தில் கொண்டு பாரத ரத்னா ராஜீவ் காந்தி கனவு கண்ட அமைப்பே பஞ்சாயத்து ராஜ். உள்ளாட்சி அமைப்புகள் தாங்களின் தேவைகளையும் வளர்ச்சியையும் திட்டமிட்டு நிறைவேற்றி கொள்ள வகை செய்யும் இந்த சட்ட அமைப்பு, 1993 ஏப்ரலில் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் அவர்களின் ஆட்சி காலத்தின் போது, அரசயலமைப்பு சட்டத்தின் 73 மற்றும் 74-வது திருத்தங்களால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டங்கள் காலாண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். அதன்படி, முதல் காலாண்டின் கிராம சபைக் கூட்டம் வரும் 26-ந்தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் அனைத்து ஊராட்சிகளிலும் பேரூராட்சிகளிலும் தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரால் நடத்தப்பட உள்ளது.
அந்த கிராம சபை கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்தில், பேரூராட்சியில் இருக்கும் இருக்கும் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த ஆண்டு தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உள்ளாட்சி ஜனநாயகத்தை முடக்கும் முயற்சியாக, தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இதனால் உள்ளாட்சி அமைப்புகள் நலிவடையத் தொடங்கியுள்ளன. இது நாட்டின் முதுகெலும்பை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கை என்பதை அனைவரும் உணர வேண்டும். எனவே, கிராம சபையில் முதல் தீர்மானமாக, தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்த மாநில அரசை வலியுறுத்த வேண்டும்.
இந்த தீர்மானத்தை உடனடியாக ஏற்று தமிழ்நாடு அரசும் உள்ளாட்சித் தேர்தல்களை இனியும் எவ்வித தாமதமும் இன்றி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டு வரையரைகளில் குழப்பம், வாக்காளர் பட்டிலில் சிக்கல் போன்ற பிரச்சினைகளை எல்லாம் போர்க்கால அடிப்படையில் சரி செய்து, உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தத் தேவையான முயற்சிகளை தமிழ்நாடு அரசு தொய்வின்றி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதே போன்று, நீதிமன்றங்களில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து முடித்து, மகாத்தா காந்தியடிகளின் கிராம சுயராஜ்ய கனவை நிறைவேற்ற துணை நிற்க வேண்டும்.
அடுத்தாக, கிராம சபைக் கூட்டங்களில், முழு மதுவிலக்கை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானங்களையும் கொண்டு வர வேண்டும். இளைய சமுதாயம் மது மற்றும் போதைப் பழக்கங்களால் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில், பூரண மது விலக்கு ஒன்றே நாட்டை உய்விக்கும் வழி என்பதை கிராம மக்கள் உணர்ந்து, இத்தகைய தீர்மானத்தை கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம், எதிர்கால சந்ததியினரின் ஒளிமயமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்க வேண்டும். அதையும் கிராமங்களில் இருந்தே செய்ய வேண்டும்