எம்.ஜி.ஆர். வீட்டை ரசிகர்கள் பாதுகாக்க வேண்டும்

எம்.ஜி.ஆர். வீட்டை ரசிகர்கள் பாதுகாக்க வேண்டும்

ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் போதும்

‘‘எம்.ஜி.ஆர். வீட்டை ரசிகர்கள் பாதுகாக்க வேண்டும்’’

நடிகை சரோஜாதேவி பேட்டி -சென்னை, டிச.31

‘‘எம்.ஜி.ஆர். வீட்டை ரசிகர்கள் பாதுகாக்க வேண்டும். ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் போதும். அவர் வாழ்ந்த இடத்தை சோலையாக மாற்றி விடலாம்’’ என்று நடிகை சரோஜாதேவி கூறினார்.

சரோஜாதேவி

தமிழ் பட உலகின் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர், சரோஜாதேவி. எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் ஆகிய இரு பெரும் கதாநாயகர்களுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர். இப்போது அவர் பெங்களூரில் வசித்து வருகிறார்.

சரோஜாதேவி பெங்களூரில் இருந்து போன் மூலம் ‘தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.5 லட்சம் உதவி

‘‘சென்னை, புதுச்சேரி, கடலூர் உள்பட பல நகரங்கள் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்குள்ளானதை அறிந்து மிகுந்த வேதனைக்குள்ளானேன். தமிழ்நாடு எனக்கு புகுந்த வீடு மாதிரி. எனவே மழை வெள்ள சேதத்துக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய முடிவு செய்து இருக்கிறேன்.

வருகிற ஜனவரி 6-ந் தேதி இதற்காக நான் சென்னை வருகிறேன். வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்க முடிவு செய்து இருக்கிறேன்.

எம்.ஜி.ஆர். வீடு

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில், எம்.ஜி.ஆர். வீடு பாதிக்கப்பட்டிருப்பதையும், அவர் பயன்படுத்திய பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதையும் அறிந்து மிகுந்த வேதனைப்பட்டேன். அழுகையாக வந்தது. மனிதராக பிறந்து தெய்வமாக போனவர், அவர். அவருடைய வீட்டில் உட்கார்ந்து நான் சாப்பிட்டு இருக்கிறேன்.

எம்.ஜி.ஆர். வீட்டை அவருடைய ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டும். ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் போதும். அவர் வாழ்ந்த இடத்தை சோலையாக மாற்றி விடலாம்.

சிம்பு விவகாரம்

அந்தக்காலத்தில் பிரபல கதாநாயகிகளாக இருந்த நாங்கள் ஆயிரக்கணக்கில்தான் சம்பளம் வாங்கினோம். இப்போது உள்ள கதாநாயகிகள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். சீக்கிரமே சம்பாதித்து சொந்த ஊருக்கு ஓடி விட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

சிம்பு விவகாரத்தை பத்திரிகைகளிலும், டி.வி.களிலும் பார்த்தேன். அவருடைய தவறுக்கு அவர் மன்னிப்பு கேட்டு விடலாம். நாமும் மன்னித்து விடலாம். அவருடைய அம்மாவும், அப்பாவும் உருகுவதைப் பார்த்தால், பாவமாக இருக்கிறது’’.

இவ்வாறு சரோஜாதேவி கூறினார்.