வேடந்தாங்கல் சரணாலயத்தில் வெளிநாடு பறவைகள் முகாம்

வேடந்தாங்கல் சரணாலயத்தில் வெளிநாடு பறவைகள் முகாம்

சென்னை, ஜன.3–
பறவைகளின் சொர்க்க பூமியான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சீசன் களைகட்டியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வடகிழக்குப் பருவமழை காரணமாக ஏரி நிரம்பியுள்ளதால் பறவைகளின் வரவு அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டுக்கு தென்மேற்கில் செங்கல்பட்டு – உத்திரமேரூர் சாலையில் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்.
தமிழகத்தில் உள்ள 12 பறவைகள் சரணாலயங்களில் வேடந்தாங்கல் பழமையானதும் சிறப்பு வாய்ந்ததும் ஆகும். சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த சரணாலயம் 30 ஹெக்டேர் பரப்பளவில் பறந்து விரிந்து பசுமையாகக் காணப்படுகின்றது.
ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜுலை மாதம் வரை இங்கு நிலவும் இதமான தட்பவெட்பச் சூழல் காரணமாகவும் போதிய உணவு கிடைப்பதினாலும் பல்வேறு நாடுகளில் இருந்தும், அண்டை மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பறவையினங்கள் இங்கு வருகை தருகின்றன.
45 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட பறவைகள்
நவம்பர் மாதம் முதல் குளிர்பிரதேச நாடுகளிலிருந்து மிகவும் அரிதான 26 வகையான அரிய இனத்தை சேர்ந்த 45,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வருகை புரிகின்றன.
பறவைகளின் எச்சங்கள் விளை நிலங்களில் விழுந்து இயற்கை உரமாக மாறி மகசூலைப் பெருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெளிநாட்டு பறவைகள் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் கடந்து வேடந்தாங்கலுக்கு இனப்பெருக்கத்திற்காக வருகின்றன. மற்ற உள்நாட்டு பறவைகள் இங்கு நிலவும் மிதமான தட்பவெட்ப நிலை, போதுமான நீர் நிலைகள், எளிதில் கிடைக்கும் உணவு, கூடுகட்டுவதற்கு ஏதுவான வனப்பகுதி, மேலும் இங்கு நிலவும் அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழ்நிலையின் காரணமாக வேடந்தாங்கலை இந்த பறவைகள் தேர்ந்து எடுத்து வருடம் தவறாமல் இங்கு வருகின்றன.
முட்டையிட்டு
குஞ்சு பொரித்து
அப்படி வரும் பறவைகள் இங்கு வந்து தங்கி முட்டையிட்டு குஞ்சு பொரித்து குஞ்சுகள் முறையாகப் பறக்கத் தொடங்கியதும் ஜுலை மாத இறுதியில் இங்கிருந்து செல்கின்றன.
வேடந்தாங்கல் பகுதியைச் சுற்றியுள்ள மதுராந்தகம், வெள்ளபுதூர், வளையாதூர், உத்திரமேரூர், மலைவையாவூர் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் இருந்து வேடந்தாங்கல் ஏரிக்குப் போதுமான தண்ணீர் வருகின்றது.
வனத்துறையினர் பறவைகள் வருவதற்கு முன்பாகவே ஏரியின் ஆழத்தை அதிகரித்து, நீர்வரத்து கால்வாய்களை முழுமையாகத் தூர்வாரி, மதகுகளைச் சீரமைத்துள்ளனர். மேலும் உத்திரமேரூர், கட்டியாம்பந்தல், வெள்ளப்புத்தூர் ஆகிய ஏரிகள் நிறைந்து அவற்றின் உபரி நீர், சரணாலய ஏரிக்கு வரும் வகையில் கால்வாய்களை வெட்டியுள்ளனர்.

சமீபத்தில் கட்டப்பட்ட இரண்டு பெரிய கால்வாய்கள் வழியாக வந்த மழை நீர் வேடந்தாங்கல் ஏரியின் நீர்மட்டத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. இதனால் சரணாலயத்தின் ஏரி அதன் முழுக் கொள்ளவை எட்டியுள்ளது. அதனால் பறவைகளில் வரத்தும் அதிகரித்துள்ளது.
கூடுகட்டி தங்க
மரங்கள்

சீசன் துவங்குவதற்கு முன்பாக வனத்துறையினர் பறவைகள் வந்து கூடுகட்டி தங்குவதற்கு ஏற்றவாறு நீர்க்கடம்ப மரங்கள், சமுத்திர பாலை, கருவேல மரங்களை ஏரியின் நடுவிலும் கரை ஓரங்களிலும் அதிக அளவில் நட்டு பராமரித்து வந்ததன் பலனாக பறவைகள் உற்சாகமாகக் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கத் துவங்கியுள்ளன.
சரணாலயத்தையும் அதனைச் சுற்றி உள்ள நீர்நிலைகள், விவசாய நிலங்களில் பறவைகளுக்குத் தேவையான மீன், நத்தை, நண்டு, தவளை, புழு, பூச்சிகள், பாசி, புல் மற்றும் சிறிய வகை பாம்புகள் அதிகமாகக் கிடைக்கின்றன. மேலும் வனத்துறை சார்பில் லட்சக் கணக்கில் மீன் குஞ்சுகள் ஏரி முழுவதும் விடப்பட்டுள்ளதால் பறவைகள் உற்சாகம் கானப்படுகின்றன.
உலகம் முழுவதும் இந்த மாதங்களில் கடும் குளிர் நிலவுவதால் மித வெப்ப நாடான இந்தியாவிற்குப் பறவைகள் படை எடுக்கின்றன. குறிப்பாக வேடந்தாங்கல் பகுதியில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பசுமையான சூழ்நிலை நிலவுவதால் ஆஸ்திரேலியா, ஐரோப்பா, சீனா, நேபாளம், பாகிஸ்தான், சுவிட்சர்லாந்து, கனடா, இலங்கை, சைபீரியா, பங்களாதேஷ், பர்மா உள்ளிட்டவெளிநாட்டு பறவைகள், உள்நாடு மற்றும் பிற மாநிலத்தைச் சேர்ந்த பறவைகள் இங்கு குவியத் துவங்கியுள்ளன.
சாம்பல் நாரை
வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், வர்ண நாரை, மிளிர் உடல் அரிவாள் மூக்கன், கூழைக் கடா, பாம்புத்தார, நத்தைகொத்தி நாரை, சாம்பல் நாரை, குருட்டுக்கொக்கு (மடையான் ), புள்ளிமூக்கு வாத்து, உண்ணிக் கொக்கு, தட்டை வாயன், நீர்காகம், நாரைகள், ஊசிவால் வாத்து, பவள உள்ளான், உப்புக்கொத்தி (பட்டாணி உள்ளான் ),பழுப்பு வாலாட்டி, வக்கா, நீர்க்கோழி, வெளிர் உடல் அரிவாள் மூக்கன், கொண்டை நீர்காகம், நாமக் கோழி, பழந்தின்னி வவ்வால், பச்சைக்காலி,கிளுவை, சிறுவெண் கொக்கு, முக்குளிப்பான், சிரவி, பெரிய கொக்கு உள்ளிட்ட பறவைகள் வேடங்தாங்கல் சரணாலயத்திற்கு வந்தவண்ணம் உள்ளன.
மேலும் 2 மாதம்
இதுவரை சுமார் 22,800 பறவைகள் முகாமிட்டு உள்ளதாகவும் இவை ஜனவரி மாதத்தில் மேலும் அதிகரித்து ஜுன், ஜுலை மாதங்களில் இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் நிறைவடையும் சீசன் இந்த ஆண்டு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பறவைகளைக் காண இந்த சீசனில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும், உள்ளூரில் இருந்தும் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வரக்கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.
கரிக்கிளி ஏரி
வேடந்தாங்கல் சரணாலயத்தில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள “கரிக்கிளி ஏரி” நீர் நிறைந்து காணப்படுவதால் இங்கும் கணிசமான பறவைகள் சுற்றித் திரிவது பார்வையாளர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் முனைவர் வி.கே. மெல்கானி, தலைமை வனப் பாதுகாவலர் கிருஷ்ணகுமார், வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர் கே.எஸ்.வி.பி. ரெட்டி, வன உயிரினக் காப்பாளர் கே. கீதாஞ்சலி, வண்டலூர் உயிரியல் பூங்கா உதவி இயக்குநர் கு. சுதாகர், வனச்சரக அலுவலர் கே. டேவிட்ராஜ், வனவர் ஆர். பொன்னுரங்கம் உள்ளிட்டோர் கொண்ட குழு கடந்த வாரம் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதன் காரணமாக பார்வையாளர்களுக்குப் பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் கோபுரம்
* சுற்றுலாப் பயணிகள் பறவைகளை சிரமம் இன்றி பார்வையிட 3 இடங்களில் 40 அடி உயரம் கொண்ட பார்வையாளர்கள் கோபுரம் அமைக்கபட்டு அதில் பறவைகளை மிக அருகிலும் துல்லியமாகவும் காண தொலைநோக்கிகள் பொருத்தப்பட்டுள்ளது.
* ஏரியின் கரை பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபாதை அமைக்கபட்டுள்ளது. பல இடங்களில் சாய்வு நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.
* சரணாலயத்தை சுற்றி சுத்திகரிக்கபட்ட குடிநீர் குழாய்கள், சுகாதாரமான கழிப்பறைகள், பறவைகள் பற்றி தெரிந்து கொள்ள படங்களுடன் கூடிய தகவல் பலகைகள் ஆங்காங்கே வைக்கபட்டுள்ளது. பறவை இனங்கள் குறித்த அரிய தகவல்கள் அடங்கிய ஒளி, ஒலி அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது அதில் 30 வகையான பறவைகளின் ஒலியை கேட்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
* வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் உடமைகளை வைப்பதற்கு பாதுகாப்பு அறை கட்டப்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சரணாலயத்தை சுற்றி பார்க்க சக்கர நாற்காலிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
வீடியோவில் படம் எடுக்க
ரூ.150 கட்டணம்
* சரணாலயத்தில் பறவைகளைப் பார்ப்பதற்கு பெரியவர்களுக்கு ரூ. 5, சிறியவர்களுக்கு ரூ. 2, ஸ்டில் கேமராவில் படம் எடுக்க ரூ. 25, வீடியோ கேமராவில் படம் எடுக்க ரூ. 150 ம் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.
முன்கூட்டியே அனுமதி பெற்று மொத்தமாக வரும் பள்ளி மாணவர்களுக்கு நுழைவுக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
சீசன் முடியும் வரை விடுமுறையின்றி காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை சரணாலயம் திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருவதற்கு சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு பேருந்து வசதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிளாஸ்டிக்கை
தவிர்க்க வேண்டுகோள்
குறைந்த செலவில் சென்னைக்கு மிக அருகில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள், பறவை ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வரத் தொடங்கி உள்ளனர். சரணாலயத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்குமாறும் தமிழ் நாடு வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.