தமிழக அரசின் புதிய விதிமுறைகள்படி பத்திரப்பதிவு செய்ய அனுமதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தமிழக அரசின் புதிய விதிமுறைகள்படி பத்திரப்பதிவு செய்ய அனுமதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, சட்டவிரோதமாக வீட்டு மனைகளாக மாற்றப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர், “அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து” உத்தரவிட்டனர்.

மேலும், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி தமிழக அரசு, தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டம், பிரிவு 22(ஏ)-ல் திருத்தம் கொண்டு வந்து, அரசாணை வெளியிட்டது.

அந்த அரசாணையில், ‘அங்கீகாரம் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது. அதே நேரம், 2016-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறுவிற்பனை (பத்திரப்பதிவு) செய்யலாம்’ என்று கூறியிருந்தது.

இந்த அரசாணையை ஐகோர்ட்டு ஏற்கவில்லை. அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் எவ்வாறு வரையறை செய்யப்படும் என்பது குறித்து விதிமுறைகளை உருவாக்கி, அதுதொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுத்து, அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை வரையறை செய்தும் தமிழக அரசு விதிமுறைகளை உருவாக்கி, 2 அரசாணைகளை கடந்த 5-ந் தேதி வெளியிட்டது. இந்த அரசாணைகள் ஐகோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசாணைகளை ஏற்கக்கூடாது என்று மனுதாரர் யானை ராஜேந்திரன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.

அதேபோல அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அய்யாதுரை உள்பட பலர் ஆஜராகி வாதிட்டார்கள்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டம் 1908-ல் தமிழக அரசு கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வந்த திருத்தத்தின் அடிப்படையில், தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டம் பிரிவு 22ஏ-ன் கீழ், கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில், அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை (பத்திரப்பதிவு) செய்யலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த அரசாணை பிறப்பிக்கப்படும்போது, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்யும் விதிமுறைகளை தமிழக அரசு உருவாக்கவில்லை. அப்படிப்பட்ட விதிமுறைகள் நடைமுறையிலும் இல்லை. அதே நேரம், குழந்தைகளின் கல்விக்காகவும், திருமணத்துக்காகவும் வாங்கிய அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்ய முடியாமல் பலர் தவிக்கின்றனர் என்று எங்களது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

தமிழக அரசின் புதிய விதிமுறைகள்படி பத்திரப்பதிவு செய்ய அனுமதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

 

மேலும், “தமிழ்நாடு அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் ஒழுங்குமுறை விதிகள் 2017” என்ற புதிய விதியை தற்போது அரசு உருவாக்கி உள்ளது. இந்த விதியில், 2016-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட அனைத்து வகையான அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்ய விதிவிலக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இது, தமிழ்நாடு நகரமைப்பு சட்டத்துக்கு எதிரானது ஆகும். எனவே, இந்த விதிவிலக்கு செல்லாது.

தற்போது அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்ய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள, வரையறை கட்டணம், மேம்பாட்டு கட்டணம் உள்ளிட்டவைகளை செலுத்தி, அனைத்து அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளையும் வரையறை செய்த பின்னரே, அதை பத்திரப்பதிவு செய்ய வேண்டும். அதாவது, புதிய விதிமுறைகளை பின்பற்றித்தான் பத்திரப்பதிவுகளை செய்யவேண்டும்.

தற்போது வழங்கியுள்ள இந்த அனுமதி கூட, இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்திக்கொள்கிறோம்.

மேலும், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று ஐகோர்ட்டு பிறப்பித்த தடை உத்தரவு, 2016-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி முதல் 2017-ம் ஆண்டு மார்ச் 28-ந் தேதி வரை அமலில் இருந்தது.

இந்த காலகட்டத்தில், செய்யப்பட்ட பத்திரப்பதிவு சட்டப்படி செல்லாதது ஆகும். இந்த காலகட்டத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைகளை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, (வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது) பத்திரப்பதிவு செய்யக்கூடாது. இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 14-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.