*’எழுச்சி தமிழர்’ தொல். திருமாவள வன் வெளியிட்ட ‘பேராண்டி’ படத்தி ன் இசை*
வேதா மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், பத்மா கந்தசாமி எஸ்டேட் நிறுவனம் வழங்கும் ஆர் .தங்கமணி இயக்கத்தில் உருவான ‘பேராண்டி’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘எழுச்சித் தமிழர்’ தொல் திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார்.
இயக்குநர் ஆர். தங்கமணி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேராண்டி’ எனும் திரைப்படத்தில் லதா, கராத்தே ராஜா, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், அறிமுக நடிகர் அரவிந்தராஜ், லலிதா, ஓசூர் டோனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டி. மகிபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹித்தேஷ் முருகவேல் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேதா மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினருடன் ‘எழுச்சி தமிழர்’ தொல். திருமாவளவன், பத்மா கந்தசாமி எஸ்டேட்ஸ் நிறுவனர் ராஜேஷ், தொழிலதிபர் ராமச்சந்திரன், வழக்கறிஞர் உமா சங்கரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பாடலாசிரியர் அருள்தாஸ் பேசுகையில், ” நாமெல்லாம் ஒரே மண்ணில் தான் பிறந்தோம். ஒரே மண்ணில் தான் வளர்ந்தோம். ஆனால் நாம் அனைவரும் ஒன்றா..!? என்று பார்த்தால்… நாம் அனைவரும் சமமானவர்களாக இல்லை. இதை வலிமையாக படைப்பில் இடம்பெறும் பாடல் மூலமாக சொல்ல வேண்டும் என இயக்குநர் பாடலுக்கான சூழலை சொன்னார். பாடலை சிறப்பாக எழுதி இருக்கிறேன் பாடலும், படமும் சிறப்பாக இருக்கிறது. அனைவரும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
புரட்சியாளர் அம்பேத்கர் சொன்ன கருத்துக்கள் ஏராளம். அதில் ஒரு சிறு துளியை மட்டும் எடுத்து.. இப்படத்தை இயக்குநர் உருவாக்கியிருக்கிறார். இதைத் தவிர்த்து இந்த தருணத்தில் என்னால் படத்தைப் பற்றி விரிவாக சொல்ல முடியாது” என்றார்.
பாடலாசிரியர் சிவலிங்கம் பேசுகையில், ”பேராண்டி என்ற சொல்லுக்கு அர்த்தம் உண்டு. அது ஒரு பாசமிகு வார்த்தை. நான் பத்தாவது வரை தான் படித்திருக்கிறேன். ஆனால் கவிதை எழுதுவேன். கவி பிரியன். என்னுடைய நண்பரும் பாடலாசிரியருமான அருள் தாஸ் மூலமாக இயக்குநரின் அறிமுகம் கிடைத்து, இப்படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. பாடல் எளிமையாகவும் இருக்க வேண்டும் பொருள் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என இயக்குநர் கேட்டுக்கொண்டார். ‘நிலவை பிடிக்க ஆசைப்பட்டேன் ராசாத்தி.. என் நெஞ்சமெல்லாம் நீதாண்டி ராசாத்தி..’ என்ற பாடலை எழுதியிருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி” என்றார்.
இசையமைப்பாளர் ஹித்தேஷ் முருகவேல் பேசுகையில், ” இந்தப் படத்தின் பாடல்களும், இசையும் நன்றாக இருப்பதாக ‘எழுச்சித் தமிழர்’ தொல் திருமாவளவன் பாராட்டியது எனக்கு ஆனந்தமாக இருந்தது. அவருக்கும், இந்த வாய்ப்பினை வழங்கிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கும் என் நன்றி.
இந்தப் படத்தில் பணியாற்றும்போது கிடைத்த சந்தோஷம் என்னவென்றால்.. ஆச்சி மனோரமா இந்த படத்திற்காக என்னுடைய இசை அமைப்பில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்தப் பாடலை லைவ் சவுண்டில் பதிவு செய்திருக்கிறோம். தற்போது உள்ளது போல் ஏஐ தொழில்நுட்பத்தில் இந்த பாடலை உருவாக்கவில்லை. இந்தப் பாடலை ரசிகர்கள் கேட்டால் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இந்தப் பாடலையும் , படத்தையும் ஊடகங்களும், ரசிகர்களும் ஊக்கமளித்து, நல்ல பாடல்களை வாழ வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நடிகர் அரவிந்த் ராஜ் பேசுகையில், ” இது என்னுடைய முதல் மேடை. இந்தப் படத்தின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை இயக்குநரின் முழு முயற்சியில்தான் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை நம்பிக்கையின் பேரில்தான் நாங்கள் பணியாற்றினோம். முதலில் இந்தப் படத்திற்கு மனோரமா ஆச்சி தான் நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு சில காரணங்களாலும்… அவர்களுடைய உடல் நிலையின் காரணத்தாலும்.. அவர்களால் இதில் நடிக்க முடியவில்லை. ஆனால் என்னுடைய அதிர்ஷ்டம் அவர்கள் இந்த படத்திற்காக ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள்.
என்னுடன் லதா மேடம் நடித்திருக்கிறார்கள். இதனை நான் என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது மறக்க இயலாத சம்பவங்கள் நடைபெற்றது. குறிப்பாக பாடல் காட்சியை ஊட்டியில் படமாக்கப்படும் போதும்… சண்டைக் காட்சியை படமாக்கப்படும் போதும் .. மறக்க இயலாத அனுபவங்கள் ஏற்பட்டது. இந்தப் படத்தில் இடம்பெறும் பாடல் வரிகள் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. ஆனால் இயக்குநர் பாடல் மீதும், பாடல் வரி மீதும் நம்பிக்கை வைத்தார். இந்தப் பாடல் ஹிட் ஆகும் என்றும் உறுதியாகச் சொன்னார். என்னை பொருத்தவரை தற்போது வெளியாகும் பாடல்களில் பாடல் வரிகள் பெரிதாக இருப்பதில்லை. இசை தான் அதிகம் இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் நம் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிப்பது போல் சிலம்பாட்டம் உள்ளது. பாடல் வரிகளும் அனைவரும் ரசிப்பது போல் இருக்கிறது” என்றார்.
நடிகை லதா பேசுகையில், ” இந்தப் படத்தை தற்போது பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. படமும் தமிழ் கலாச்சாரத்தை சொல்வது போல் இருக்கிறது. தற்போது வெளிவரும் பாடல்களில் கருத்துகளே இருப்பதில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்த பாடல்களில் கூட.. பாடல் வரிகளில் இனிமை இருக்கிறது. தற்போதைய பாடல்களில் இசைக்கருவிகளின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கிறது. இந்தக் கால இளைய தலைமுறையினருக்கு பிடிக்கிறது என உருவாக்குகிறார்கள். இதை தவறு என்று நாம் சொல்ல முடியாது. ஆனால் இந்தப் படத்தை இயக்குநர் அற்புதமாக இயக்கியிருக்கிறார்.
இயக்குநர் என்னை சந்தித்து இப்படத்தில் பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கதையைக் கேட்டதும் நான் யோசித்தேன். இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் தோன்றினால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் சொல்ல… இது தொடர்பாக மனோரமா ஆச்சியும் என்னை தொடர்பு கொண்டு நடிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதனால் இந்த படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்த காலத்து இளைஞர்கள் திறமைசாலிகள். அவர்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும். இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இப்போதெல்லாம் திரைப்படங்கள் வருவதும் தெரியவில்லை. போவதும் தெரியவில்லை. தற்போது செல்போனிலேயே படங்களை பார்த்து விடுகிறார்கள். எங்கள் காலத்தில் 200 நாட்கள் ஓடிய படங்கள் எல்லாம் உண்டு.
நான் 1973 ஆம் ஆண்டில் வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ எனும் படத்தின் மூலம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்டேன். இந்தப் படத்தில் நடித்த அனுபவங்களை பற்றி நாயகன் அரவிந்தராஜ் குறிப்பிட்டதால்.. எனக்கு பல சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.
காஷ்மீரில் என்.டி .ராமராவ் நாயகனாக நடிக்கும் படத்தின் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. அங்குள்ள பனி படர்ந்த பகுதிகளில் ஸ்கேட்டிங் செய்து வர வேண்டும். எனக்கு நவீன உடையை கொடுத்து விட்டார்கள். அவருக்கு குளிர் தாங்க கூடிய உடையை வழங்கினார்கள். அந்தக் காட்சியை படமாக்கும் போது சொல்ல முடியாத குளிரை தாங்கி நடித்தேன். இது போன்ற ஏராளமான மறக்க முடியாத சம்பவங்கள் நடந்தது. அதனால் நடிகருக்கு ஒரே ஒரு விசயத்தை நினைவுபடுத்துகிறேன். படப்பிடிப்பு தளங்களில் இதெல்லாம் சகஜம் ” என்றார்.
இயக்குநர் ஆர். தங்கமணி பேசுகையில், ” இந்தக் கதையை முதலில் மனோரமாவிடம் தான் சொன்னேன். அவர்கள் கதையை முழுவதுமாக கேட்டுவிட்டு நடிக்கிறேன் என்று சொன்னார்கள். அவர்களின் உடல்நல குறைவு காரணமாக இந்த படத்தில் நடிக்க இயலாத நிலை உருவானது. அதன் பிறகு இந்த கதாபாத்திரத்தில் யார் பொருத்தமாக இருப்பார் என்று யோசிக்கும்போது லதா மேடம் நினைவுக்கு வந்தார்கள். அதன் பிறகு அவர்களை சந்தித்து இந்த கதையை சொன்னேன். கதையை கேட்டுவிட்டு மனோரமாவை போல் என்னால் நடிக்க முடியாது. நான் என்னுடைய ஸ்டைலில் நடிக்கலாமா? என கேட்டார். அவர்களுடைய வீட்டிலேயே போட்டோ சூட் நடத்தினோம்.
பேராண்டி முழுக்க முழுக்க கிராமிய கதை. குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக்கூடிய கதை. ஒரு பேரனுக்கும், பாட்டிக்கும் இடையே உள்ள பாசத்தை சொல்லும் படம். அந்தப் பேரனுக்கு ஒரு பெரிய இடத்து பெண் மீது காதல் வந்து விடுகிறது. அந்த காதலுக்கு எதிர்ப்பும் வருகிறது. அந்த காதலை அந்தப் பாட்டி எப்படி சமாளிக்கிறார்கள்? தன்னுடைய பேரனை ஆளாக்கி அவன் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து வைக்கிறாரா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.
இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது. இதுவரை யாரும் பார்த்திராத லொகேஷன்களில் படமாக்கி இருக்கிறோம். இதற்காக கோபிசெட்டிபாளையம் -பொள்ளாச்சி- ஊட்டி -ஆகிய பகுதிகளில் அலைந்து திரிந்து லொகேஷன்களை தேர்ந்தெடுத்து படப்பிடிப்பு நடத்தினோம்.
இந்தப் படத்தை நிச்சயமாக திரையரங்குகளில் குடும்பத்தினருடன் பார்த்து ரசிக்கலாம். பேராண்டி படம் பேசப்படும் என்பது என்னுடைய கணிப்பு. பெருமாளின் ஆசியால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.
‘எழுச்சி தமிழர்’ தொல் திருமாவளவன் பேசுகையில், ” இப்போதெல்லாம் திரைப்படங்களுக்கு வைக்கும் பெயர்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்கின்றன. லதா மேடம் குறிப்பிட்டதை போல் இன்றைய 2k கிட்ஸ்களுக்கு பாடல்களும், படத்தின் பெயரும் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதால்.. வித்தியாசமான… கவர்ச்சிகரமான.. பெயரை தான் வைக்கிறார்கள். ஆனால் இயக்குநர் தங்கமணி துணிந்து நம்முடைய தமிழ் மரபை போற்றும் வகையில் ஒரு நல்ல தமிழ் பெயரை- குடும்பப் பெயரை திரைப்படத்திற்கு சூட்டியிருக்கிறார்கள். இதுவே அவருடைய துணிச்சலுக்கு சிறந்த சான்று என நான் கருதுகிறேன் பேராண்டி என்று சொல்லும் போதே தாத்தா அல்லது பாட்டி ஆகியோர் இதில் முக்கியமான பங்கு வகிக்க கூடும் என நமக்கு தெரிய வருகிறது.
தற்போது வெளியாகும் திரைப்படங்களில் ஏராளமான அரசியல் நெடி உண்டு. சில படங்களில் சாதி பெருமிதம் உண்டு. சில படங்களில் சாதி ஒழிப்பு அரசியலை பேச வேண்டிய .. அந்த கருத்தியல் போக்கை நாம் பார்க்கிறோம். இன்றைய சூழலுக்கு ஏற்ப காதல் கதையாக இருந்தாலும்… குடும்ப கதையாக இருந்தாலும்… இந்த காலத்து இளைஞர்களுக்கு ஏற்ப பெயர் சூட்டுவதில் இயக்குநர்கள் கவனமாக இருக்கிறார்கள். லதா மேடம் இந்த படத்தில் நடித்திருப்பதால்.. இந்த பெயரை இயக்குநர் தேர்வு செய்திருக்கிறார் என நான் நினைக்கிறேன்.
லதா மேடம் பேசுகையில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ தான் நான் நடித்த முதல் படம் எனக்கு குறிப்பிட்டார்கள். இதை கேட்கும்போது திடீரென்று என்னுடைய பழைய நினைவுகளுக்கு சென்று விட்டேன். நான் பார்த்த முதல் திரைப்படமே ‘உலகம் சுற்றும் வாலிபன்’ தான். அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். அப்போது நான் என்னுடைய கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்களுடன் கருப்பங் காட்டில் இருந்தேன். விடுமுறை நாளில் சம்பளம் ஏதும் இல்லாமல் அங்கு பணியாற்றுவேன். வெல்லம் காய்ச்சும் இடத்தில் பணியாற்றும் என் தந்தையின் நண்பர்… ‘உலகம் சுற்றும் வாலிபன் எனும் எம்ஜிஆர் நடித்த படத்தை பார்க்க நாங்கள் செல்கிறோம். நீயும் வருகிறாயா? ‘என கேட்டார். அந்தத் தருணத்தில் பீடி, சிகரெட் குடிப்பது எப்படி தவறோ.. அதே போல் சினிமா பார்ப்பதும் குற்றமாக கருதப்பட்டது. அதன் பிறகு என் தந்தையின் அனுமதியுடன் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள திட்டக்குடி என்னும் சிறிய நகரத்திற்கு சென்று அந்தப் படத்தை பார்த்தோம். எனக்கு எதுவும் புரியவில்லை. கதையும் புரியவில்லை. காட்சிகளும் புரியவில்லை. டிஷ்யூம் டிஷ்யூம் என்ற ஒலி தான் கேட்டது. எம்ஜிஆரை பார்த்தேன். லதாவையும் பார்த்தேன். அதன் பிறகு அவர்களை நேரில் பார்ப்பதற்கு இப்போது தான் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தற்போது வெளியாகும் நிறைய பாடல்களில் பாடல் வரிகள் தெளிவாக கேட்பதில்லை. பாடல் வரிகளை கேட்க வேண்டும் என்றால் உற்று கவனிக்க வேண்டும். ஆனால் பழைய பாடல்களில் இசையும் இனிமையாக இருக்கும். பாடல் வரிகளும் நம் மனதில் ஆழமாக பதியும். ஊக்கம் தரும் வரிகளாகவும் இருந்தது.
இயக்குநர் தங்கமணி இந்த கால இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் சப்ஜெக்ட்டை வைத்திருப்பார் என நம்புகிறேன். அது படத்தை பார்த்தால் தான் தெரியும். பேராண்டி என்பது விரும்பும் பெண்ணை திருமணம் செய்து வைக்கும் கதை. திருமணம் என்றாலே இங்கு சாதி குறிக்கிடும். அக மண முறை என்பதுதான் சமூகத்தில் இருக்கிற நடைமுறை. சட்டத்திற்கு புறம்பான ஒரு நடைமுறைதான். ஆனால் அதுதான் சமூக நடைமுறையாக இருக்கிறது. ஒரே சாதிக்குள் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது நீண்ட காலமாக இங்கு இருக்கிறது. சட்டம் அதை தடை செய்யவில்லை. ஆனாலும் இப்படி ஒரு நடைமுறை இருக்கிறது. இது பல்வேறு பிரச்சனைகளுக்கு இடம் அளிக்கிறது. இது தொடர்பாக கொலை கூட நடைபெறுகிறது.
ஆனால் இப்படத்தின் பாடல் காட்சிகளை பார்க்கும் போது பாடல்களும் பொருள் பொதிந்ததாக இருக்கிறது. அதற்கு ஏற்ப இசையும் அருமையாக இருக்கிறது. கேட்க இனிமையாக இருக்கிறது. அதனால் தான் இசையமைப்பாளரை பாராட்டினேன்.
இயக்குநர் தங்கமணி இப்படத்தின் நாயகனான அரவிந்தராஜை- தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு நடிகராக அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவருக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு.
என்னை சில திரைப்படங்களில் கௌரவ வேடத்தில் நடிக்குமாறு அழைப்பு விடுத்தார்கள். நான் அப்போது திரைப்படங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தரவில்லை.
இந்தப் படத்தின் கதை கரு எப்படி இருக்கிறது? கதை ஓட்டம் எப்படி இருக்கிறது? கிளைமாக்ஸ் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது… என்பதை பொறுத்துதான் இந்த படத்திற்கான வரவேற்பு கிடைக்கும். சிறப்பான திரைக்கதை இருந்தாலும் கூட இசை மிகவும் முக்கியமானது. பின்னணி இசை சிறப்பாக அமையவில்லை என்றால் அந்தப் படம் கடும் போராட்டத்தை எதிர்கொள்ளும். இப்படத்தின் இசையமைப்பாளர் ஹித்தேஷ் முருகவேல் பாடல்களைப் போல் பின்னணி இசையையும் சிறப்பாக வழங்கி இருக்கிறார் என நினைக்கிறேன்.
அண்மைக்காலமாக திரைத்துறையை சார்ந்த நண்பர்கள் இது போன்ற இசை வெளியீட்டு விழா, பிரிவியூ ஷோ போன்றவற்றில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறார்கள்.
‘அன்புத்தோழி’ எனும் படத்தில் இயக்குநர் என்னை நடிக்க வைத்தார். படப்பிடிப்பின் போது எனக்கு கதை தெரியாது. இயக்குநர் சொன்னதை மட்டும் செய்தேன். அதன் பிறகு வின்சென்ட் செல்வா இயக்கத்தில் ‘தமிழரசன்’ என்ற பெயரில் ஒரு படம் தொடங்கப்பட்டது. பத்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. அதன் பிறகு கைவிடப்பட்டது. அதற்கு முன்னதாக இயக்குநர் களஞ்சியம் இயக்கத்தில் ‘கலகம்’ என்ற ஒரு பெயரில் படம் தொடங்கப்பட்டது. இதற்காக போட்டோ சூட் நடந்தது. ஆனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்காமலே கைவிடப்பட்டது. அதன் பிறகு மன்சூர் அலிகான் ஒரு படத்தில் பாடல் காட்சிகள் நடிக்க வைத்தார். அதன் பிறகு கோவையைச் சார்ந்த தயாரிப்பாளர் ஒருவர் தயாரித்த ‘மின்சாரம்’ எனும் படத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சரி நாம் படத்திலாவது முதலமைச்சராக இருப்போமே..! என்று ஆசைப்பட்டு தான் அந்த படத்தில் நடித்தேன். நான் கதை விவாதத்தில் ஈடுபட்டதில்லை. கதைக்கான தலையும், காலும் எனக்குத் தெரியாது. ஒத்திகையும் கிடையாது. படப்பிடிப்பு தளத்திற்கு சென்றவுடன் இயக்குநர் என்ன செய்ய சொல்கிறாரோ… அதை மட்டுமே செய்கிறேன். அந்த தருணத்தில் எல்லாம் எனக்கு ஆர்வம் இல்லை. சின்ன வயதில் இருந்தே சினிமா பற்றிய தவறான அபிப்பிராயம் என் மனதில் இருந்ததே காரணம்.
இருந்தாலும் தங்கமணி போன்ற இயக்குநர்கள் இசை வெளியீட்டு விழா மற்றும் பிரிவ்யூ ஷோகளின் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்து அதில் கலந்து கொள்ளும்போது திரைப்படங்களின் வலிமை என்ன என்பதை உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கிறது. இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஊடகம்..! இன்றைக்கு தமிழ்நாடு அரசியலே தொடர்ந்து திரை கவர்ச்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதனை நாம் பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் எம்ஜிஆர். அதன் பிறகு அவருடைய கலை உலக வாரிசுகள் பலர் குறிப்பாக பாக்கியராஜ் போன்றவர்கள் எல்லாம் அரசியல் கட்சி தொடங்கினார்கள். சிவாஜி கணேசன் அரசியல் கட்சியை தொடங்கினார். அதன் பிறகு விஜயகாந்த் -சரத்குமார்- டி. ராஜேந்தர்- இப்படி பலர் திரைத்துறையில் இருந்து அரசியலில் தீவிரமான ஈடுபாடு உள்ளவர்கள் கட்சி தொடங்கினார்கள். கலைஞரும் திரை துறையில் ஈடுபாடு உள்ளவர் தான். இன்றைய முதல்வரும் ஓரிரு திரைப்படங்களில் நடித்தவர்தான். ஜெயலலிதா அம்மையார் திரைத்துறையில் இருந்து வந்தவர் தான். தற்போது விஜய் வரையிலும்… தமிழக அரசியலில் திரை உலகம் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருக்கிறது.. அல்லது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த திரை கவர்ச்சி இன்னும் குறைந்தபாடில்லை என்ற நிலையை நாம் பார்க்கிறோம்.
இந்தியா முழுவதிலும் உள்ள பல மாநிலங்களிலும் திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். பல நாயகர்கள் புகழ்பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தான் சூப்பர் ஸ்டார் – சுப்ரீம் ஸ்டார் – அல்டிமேட் ஸ்டார் – பவர் ஸ்டார் – என பலர் இருக்கிறார்கள்.
சீனிவாசன் கட்சி பொறுப்பில் இருந்தபோது அவருக்கு நான்தான் ‘பவர் ஸ்டார்’ என பெயர் சூட்டினேன். நான் தமிழில் கேட்டபோது.. இந்த பெயரை தான் சூட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். அவருடைய உழைப்பால் அந்தப் பெயர் மக்களிடம் சென்றடைந்தது. இந்த ‘பேராண்டி’ படத்திலும் அவர் நடித்திருக்கிறார் என்றவுடன் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.
இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் திரை துறை – அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அங்கே என் டி ஆர் இங்கே எம் ஜி ஆர் இந்த இருவர் தான் அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள்.
சமூக வலைதளங்களில், ‘ராணுவத்திலிருந்து ரிட்டயர்ட் ஆனவர்கள் வாட்ச்மேன் வேலைக்கு செல்கிறார்கள். திரைத்துறையில் இருந்து ரிட்டயர்ட் ஆனவர்கள் சி எம் ஆகிறார்கள்’ என தமிழ்நாடு அரசியல் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஏதேனும் ஒரு வகையில் திரைப்படம் அல்லது திரைத்துறை.. தமிழர்களை ஆளுமை செய்கிறது. ஆதிக்கம் செய்கிறது. இப்போது நான் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றால்… 10 -15 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு திரையுலக கதவு திறந்தது. சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. அதை நான் தவிர்த்து விட்டேன். ஆனால் தற்போது இந்த கலை மக்களுக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது. மக்களைப் பற்றி தானே திரைத்துறை பேசுகிறது. மக்களிடமிருந்து அன்னியப்படவில்லை. மக்களின் அன்றாட வாழ்க்கையை – வாழ்வியலை – அவர்கள் எதிர்கொள்கிற சவால்களை -நெருக்கடிகளை- அழகியலுடன் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். கோர்வை படுத்தி கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். பின்னணி இசை மூலம் அதற்கு உயிரப்பைக் கொடுக்கிறார்கள். திரைப்படத்தில் இடம்பெறும் இசையும், ஒளி வெள்ளமும் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கிறது. அதன் மூலம் சொல்லப்படும் கருத்துக்கள் மக்களின் மனதில் பதிகிறது.
இயக்குநரின் சிந்தனை ஜனநாயக பூர்வமானதாக இருந்தால்… இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்தக் கூடியதாக இருந்தால் ..திரைப்படங்கள் மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக விளங்கும். குடும்பப் படமாக இருந்தாலும் சரி காதல் படமாக இருந்தாலும் சரி அரசியல் நெடி வீசும் படமாக இருந்தாலும் சரி பிற்போக்குத்தனமாகவும் படம் எடுக்க முடியும். முற்போக்குத்தனமாகவும் படம் எடுக்க முடியும்.
பழமை வாதத்தையும் சொல்ல முடியும். புதுமையையும் சொல்ல முடியும். அதில் ஜனநாயகத்தை வலியுறுத்தி மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க முடியும். இயக்குநர் தங்கமணி என்னை சந்தித்து இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார் என்றால்.. நான் அவரை ஒரு ஜனநாயக சிந்தனையாளராகத்தான் பார்க்கிறேன். என்னுடைய கருத்தியலும், அவருடைய சிந்தனையும் ஒத்ததாக இருந்ததால் தான் எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
திரையுலகில் ஓரிரு வெற்றிகளை கொடுத்த பிறகு அரசியலை நோக்கி செல்கிறவர்கள் அதிகம். ஏனெனில் திரைத்துறை என்பது இது போன்றதொரு உளவியலை இங்கு கட்டமைத்திருக்கிறது. சில வெற்றிகளை கொடுத்த பிறகு முதலமைச்சர் நாற்காலி பற்றிய கனவை வழங்குகிறது.
ஆனால் நாம் ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் பதவியையும், பிரதமர் பதவியையும் ஒப்பிட வேண்டிய தேவை இருக்கிறது. கொள்கை ரீதியிலான அரசியலை முன்னெடுத்தாலும்… சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலும்… உண்மையான அதிகாரம் என்பது பிரதமர் பொறுப்பில் தான் இருக்கிறது. அந்த இருக்கையில் தான் இருக்கிறது. பெரிதாக அதற்கு ஆசைப்படுவதில்லை. சிஎம் ஆக வேண்டும் தான் ஆசைப்படுகிறோம். நம்மைப் பொறுத்தவரை முதலமைச்சர் தான் அல்டிமேட் பவர் என நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. இது ஒரு தாசில்தார் ஆபீஸ் போன்றது தான். ஒரு கலெக்டருக்கும் கீழே இருக்கும்.
இந்தப் பதவியில் இருக்கும் போது கொள்கை அளவில் மிகப்பெரிய முடிவினை எடுக்க முடியாது. சமூக மாற்றங்களை பெரிதாக செய்திட இயலாது. ஊழல் இல்லாத ஒரு மாநில அரசை கொடுக்க முடியும் என சொல்லலாம். மாநில உரிமைகளை பாதுகாக்க முடியும் என சொல்லலாம். உண்மையான அரசியல் ஆட்சி அதிகாரம் எங்கிருக்கிறது என்றால்… அரசியல் சட்ட அமைப்பின்படி பார்த்தால்.. அது டெல்லியில் தான் இருக்கிறது. பிரதமர் பதவியில் தான் இருக்கிறது. தமிழர்களிடத்தில் யாருக்கும் பிரதமராக வேண்டும் என்ற ஆசை எழுவதில்லை. தேசிய அரசியலை பேச வேண்டும். தேசிய தலைவராக உயர வேண்டும். பிரதமர் இருக்கை நோக்கி நாம் நகர வேண்டும்.
பிரதமராகிவிட்டால்… ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். ஒரு மாநில முதல்வரால் இதற்கு தீர்வு காண முடியாது. இன்னும் நாம் இந்த அடிப்படையை புரிந்து கொள்ளவில்லை.
நான் குறைத்து மதிப்பிடவில்லை. இருந்தாலும் ஒப்பிட வேண்டும் என சொல்கிறேன்.
திரைத்துறையில் நாம் பேசுகின்ற அரசியல்… திரைப்படங்களில் நாம் பேசும் அரசியல்… இன்று உலகமே ஜனநாயகத்தை வலியுறுத்தும் இடத்தை அடைந்திருக்கிறது. ஒரு காலத்தில் மன்னர் ஆட்சி இருந்தது. தற்போது எந்த நாட்டிலும் இந்த நிலை இல்லை. பல நாடுகளும் ஜனநாயக அரசாக மாறிவிட்டது. ஜனநாயகம்தான் இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு. அதுதான் இன்றைக்கு நமக்கெல்லாம் சுதந்திரத்தை அளிக்கிறது. அதுதான் பேச வைக்கிறது. அதுதான் நம்முடைய உரிமைகளை கோர சொல்கிறது. அதுதான் இப்படி ஒரு படத்தை உருவாக்க முடியும் எனும் சுதந்திரத்தை தருகிறது.
அந்த ஜனநாயக சிந்தனையை இன்னும் நாம் மக்களிடத்தில் ஆழமாக எடுத்துச் செல்ல வேண்டும். பாகுபாடு கூடாது…. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது பிறப்பின் அடிப்படையில் இல்லை…
ஆணும் பெண்ணும் சமமானவர்கள் தான்… இப்படி பல விசயங்களை போகிற போக்கில் வசனங்களாக சொல்லும்போது அது ஆழமாக படம் பார்க்கும் குழந்தைகளின் உள்ளத்தில் பதியும்.
சாதி பெருமிதம் பேசுவது பழமை வாதம் சாதியெல்லாம் வேண்டாம் நாம் ஜனநாயகத்துடன் சமத்துவமாக வாழ்வோம் என்று சொல்வது இடதுசாரி அரசியல் முற்போக்கு சிந்தனை. கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தால் தான் இடதுசாரி சிந்தனை ஏற்படும் என அர்த்தம் இல்லை. ஜனநாயகத்தை நம்பினாலே அது இடதுசாரி சிந்தனை தான். அது முற்போக்கு சிந்தனை தான்.
ஜனநாயகத்தை நம்புவது என்றால் சுதந்திரம் -சகோதரத்துவம்- சமத்துவம்- இந்த மூன்று தான்.
நேபாளம், இலங்கை, மொராக்கோ போன்ற நாடுகளில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் என்ன போராட்டம் நடைபெறுகிறது என்றால்… இது புதிய தலைமுறையின் புரட்சி என்று குறிப்பிடுகிறார்கள். சோசியல் மீடியாவின் புரட்சி என்கிறார்கள் எதுவாக இருந்தாலும் ஒரு விசயத்திற்காகத்தான் போராடுகிறார்கள். அது ஈகுவாலிட்டி. சமத்துவம் தான். அதுதான் ஜனநாயக சிந்தனை ” என்றார்.